கொஞ்சம் நெஞ்சில் . . . கொஞ்சும் கவியரசர் . . .
கவிஞர் கண்ணதாசனின் கவியின்பம் அளப்பரியது . இனிமையான தமிழில் எளிமையான பாடல்களையும், அருமையான கவிதைகளையும் தருவதில் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே தான். அவர் தன் அனுபவங்களைப் பாடலாக்கினார் . அதிலே தமிழ் நெஞ்சங்களைத் தாலாட்டினார். வாழ்க்கையில் வித்தியாசமான அந்தஸ்துக்களில் இருக்கும் எவரும் தம்மை கவிஞரின் பாடல்களில் இணைத்து தமது , நெஞ்சத்து உனர்ச்சிகளையெல்லாம் வாய்க்கால் மூலம் நெறிப்படுத்தக்கூடிய வகையில் கவிஞரது பாடல்கள் இருக்கும்.
இதோ இரண்டு அருமையான உதாரணங்களைப் பார்ப்போமா ?
அம்மா , என்ற சொல்லு அன்பு , அரவணைப்பு , எனும் சொற்களைப் பிரதிபலிப்பவை . அந்தத் #
தெய்வத்திற்கு எதை ஈடாக்க முடியும் ? தாயின் அன்பு எத்தகைய செல்வத்தினின்றும் சிறந்தது.எதனையும் ஆக்கும் வல்லமை படைத்தது.
அந்தத்தாய் தனது சேயின் பெருமையைக் கொஞ்சும் அழகை கவியரசர் கொஞ்சமாய் விளக்குகிறார்
கவிஞரின் எளிமையான வார்த்தைகளில் அதைப் பார்க்கும்போது நெஞ்சில் ஒரு புது உணர்ச்சி பிரவாகம் எடுக்கிறது
மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல்கூட சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாகும் நீயாகுமா ?
அம்மாவென்றழைக்கின்ற சேயாகுமா ?
ஒரு தாய் தன் சேயைக் கொஞ்சும் இத்தகைய எளிமை நிறைந்த இனிமையான வார்த்தைகளை ரசிக்காத நெஞ்சங்கள் இருக்க முடியுமா ?
கவிஞரின் மற்றொரு திறன் பழைய தமிழ் இலக்கியங்களை தனது எளிமை எனும் தேன் தடவி மக்களின் நாவினில் இனிக்கப் பண்ணும் தனித்தன்மை.
இதோ இங்கே குறுந்தொகையில் வந்த ஒரு சிறு பகுதியை பார்ப்போம். தலைவி , தலைவன் மீது
கொண்ட காதலைத் தோழி தலைவனைப் பழிப்பதன் மூலம் எள்ளி நகையாடும்போது , தம்க்கிடையே நிலவும் அன்பின் பெருமையை அழகாய் உவக்கிறாள் அந்த உத்தமி ,
நிலத்தினும் பெரிதே வானினும் , உயர்ந்தன்று
நீரினும் ஆர்அளவு இன்றேல் சாரல்
கருங்காற்குறிஞ்சி பூங்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனோடு நட்பே
(குறுந் - 3)
இத்தகைய ஒரு இலக்கியச்செறிவு நிறைந்த அருமையான விளக்கத்தை , எளிமையாக சகலரும்
அறியக்கூடிய வகையில் எமது கவியரசர் கொண்டு வந்து தருகிறார் பாருங்கள் ,
நிலவும் வானும் , நீரும் நிலமும்
ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ ?
நண்பர்களே கவியரசரின் திறமையை , தனித்தன்மையை வியப்பதற்கு அவரின் இலக்கியச் சவால்களை , காவியச் சிறப்புக்களைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
நான் தமிழ் இலக்கியத்தில் கரை கண்டவனோ அன்றி அதை ஒரு சிறப்புப் பாடமாக எடுத்து கற்றவனோ அல்ல . கவியரசரின் இனிய பாடல்களினால் கவரப்பட்டு , அவரைப் பற்றி அறியும் ஆவலினால் பல நூல்களைப் படித்ததின் மூலம் இச்சிறியெனின் எண்ணத்தடாகத்தில் தேங்கிய சில எச்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புடன்


0 Comments:
Post a Comment
<< Home